உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நடைபெற்ற திடீர் சோதனையில் 200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், 31 ஆயிரம் அபராதம் விதித்தும் நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதியில் நெகிழி பயன்பாடு அதிகரித்து வருவதாக எழுந்த புகாரின் பேரிலும், நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் உசிலம்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள், மாலைக் கடைகள், நெகிழி பொருட்கள் விற்பனை கடைகள் என, பல்வேறு கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பைகள், பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பொருட்கள் என, சுமார் 200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து ,
சுமார் 31 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதித்து இனி மேல் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யக்
கூடாது என, எச்சரிக்கையும் விடுத்தனர்.