அலங்காநல்லூர் அருகே அமைச்சர் மூர்த்தியை வரவேற்க ஊன்றிய கொடிக்கம்பத்தால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பாறைப்பட்டி ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி
மன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல். ஏ. வை, வரவேற்கும் விதமாக சாலை ஓரங்களில் திமுக கொடி கம்பங்களை பொதுக்குழு உறுப்பினர் சரந்தாங்கி முத்தையா ஏற்பாட்டில், சாலை ஓரங்களில் ஊன்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஊராட்சி பொது மக்களுக்காக கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாயில் திமுக கொடிக் கம்பம் பட்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வெளியேறியது காலை 8 மணி முதல் நிகழ்ச்சி நடந்த பன்னிரண்டு மணி வரை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. குடிநீருக்காக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்காக, கொடிக்கம்பம் நட்டபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய குடிநீரால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .
இது குறித்து, அந்த பகுதி பொதுமக்கள் பேசுகையில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது . கிராம ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயை கொடிக்கம்பம் ஊன்றும் போது உடைந்ததால் குடிநீர் வெளியேறியது வேதனை அளிக்கிறது . இதன் காரணமாக, இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் கொடி, மரங்களை நட்டால் நன்மை பயக்கும் என புகார் கூறினார்கள்.