மதுரை மாவட்டம் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,052 பயனாளிகளுக்க ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 29 சிறந்த கூட்டுறவு சங்கங்களை பாராட்டி கேடயங்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததாவது:-
கடந்த ஆண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஏறத்தாழ ரூபாய் 100 கோடிக்கு மேலாக கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு முதன்முதலில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடியினை நடைமுறைப்படுத்தினார்கள். மேலும், கடன் தள்ளுபடி செய்ததோடு, மட்டுமல்லாமல் மீண்டும் கடனுதவிகளை வழங்கினார்கள்.
கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்ற போதும் அரசே கடனுதவிகள் வழங்கும் பொறுப்பினை ஏற்று நடத்தியது. கூட்டுறவு வார விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக உள்ளது. ஏனெனில் 1989-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் தலைவராக இருந்துள்ளேன்.
மேலும், இதுவரை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3 முறை கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, துணை முதலமைச்சர் கடந்த 06.02.2023-அன்று நடைபெற்ற விழாவில், மதுரை மாவட்டத்தில் உள்ள 500 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்கள். இவற்றின் மூலம் புதிதாக மகளிர் சுயஉதவிக் குழுக்களில் சேர்ந்த 6 ஆயிரம் நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.
பெண்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெண்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் பெற வருவோர்களுக்கு எவ்வித ஏற்றத்தாழ்வும், வேறுபாடும் பார்க்காமல் உடனடியாக கடனுதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயக் கடனுதவிகள் மற்றும் சிறுதொழில் செய்வதற்கு கடனுதவிகள் கோருவோர்களுக்கு உரிய நேரத்தில் கடனுதவிகள் வழங்கினால்தான் அவர்கள் அப்பணிகளை உரிய நேரத்தில் செய்ய முடியும்.
ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். முற்காலத்தில் ஆண்களே வீட்டின் தலைவர்களாக இருந்து வந்தார்கள். ஆனால், தற்போது பெரும்பாலான வீடுகளில் பெண்களே வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்கள். பெண்கள் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் ஆண்களை விட பெண்களே முன்னிலை வகிக்கின்றனர்.
பெண்கள் தாம் பணிபுரிந்து பெறும் வருவாய் முழுவதையும் தங்கள் குடும்ப செலவிற்காகவும், குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் செலவிடுகின்றனர். ”எல்லோரும் எல்லாம்” பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முதலமைச்சர் செயலாற்றி வருகிறார் என தெரிவித்தார்
இந்நிகழ்ச்சிகளின் போது, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், பாண்டியன் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மனோகரன், நகர கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஹேமா சலோமி, ஆவின் பொது மேலாளர் சிவகாமிஉட்பட கூட்டுறவு சங்கங்களின் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.