திருச்சியில் இளைஞரை தாக்கி செல்போனை பறித்து சென்றவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி உய்ய கொண்டான் திருமலை சண்முகாநகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கந்தவேல். இவரது மகன்கள் ஜெயசூர்யா மற்றும் அபிமன்யூ. கடந்த 3-4-2022 அன்று கந்தவேல் குடும்பத்தினர் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.
அன்று இரவு காரை நண்பர் வீ்ட்டில் நிறுத்துவதற்காக ஜெயசூர்யா சண்முகா நகர் ஐந்தாவது கிராசிற்கு சென்றார். அவரை திரும்ப வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அவரது தம்பியான அபிமன்யூ இருசக்கர வானத்தில் ஐந்தாவது கிராசிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த நாச்சிகுறிச்சியை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவர் அபிமன்யூ வைத்திருந்த செல்போனை (ஐபோன்) பேசுவதற்கு கேட்டுள்ளார். அபிமன்யூவிடம் செல்போனை வாங்கிய ஸ்ரீராம் அதில் பேசிவிட்டு திரும்ப செல்போனை கொடுக்கவில்லை.
அபிமன்யூ செல்போனை கேட்டபோது ஸ்ரீராம் கத்தியால் அவரது முகத்தில் வெட்டிவிட்டு செல்போனுடன் ஓடிவிட்டார். இதுகுறித்து அபிமன்யூவின் தந்தை கந்தவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் ஸ்ரீராமை கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீராமிற்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் கத்தியால் வெட்டப்பட்டதில் காயம் அடைந்த அபிமன்யூவிற்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவி்ட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.