நாமக்கல்:
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி. தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கான, கரும்பு அரவைத் துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கரும்பு அரவையை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பகுதியில், நடப்பு அரவைப் பருவத்திற்கு 396 ஏக்கர் நடவு கரும்பும், 2053 ஏக்கர் மறுதாம்பு கரும்பும் ஆக மொத்தம் 2449 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 36.75 டன்கள் சராசரி விளைச்சல் மதிப்பீடாக கணக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 90,000 டன்கள் பதிவு கரும்பும், பதிவில்லாக் கரும்புகளை நேரடி பதிவு மூலம் 10,000 டன்களும் ஆக மொத்தம் 2024&-25 அரவைப் பருவத்தில் மொத்தம் 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆலை 2023-24 கரும்பு அரவைப் பருவத்தில் 1.65 லட்சம் டன்கள் 7.77 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் அரவை செய்துள்ளது. அரவை செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரயத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.2919.75 வீதம் மொத்தம் ரூ.48.18 கோடி உறுப்பினர்களுக்கு நிலுவையின்றி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு மாநில அரசு அறிவித்த கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215- வீதம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நடப்பு கரும்பு அரவைப் பருவத்திற்கு ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரயத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ.3,151ஐ ஆலையின் நிதிநிலையின் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும்.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பதிவில்லாக் கரும்பு வைத்துள்ள விவசாயிகள் தங்களது கரும்புகளை நேரடிப் பதிவு மூலம் ஆலைக்கு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் தமிழக அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சர்க்கரை ஆலை மூலம் புதிய ரக கரும்பு நடவு செய்யும் உறுப்பினர்களுக்குதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானியத்தில் (ஏக்கருக்கு ரூ.5,000- மானியம்) புதிய ரக விதைக் கரும்புகள் மற்றும் நாற்றுக்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் வகையில் 4.5 அடி பார் முறையில் கரும்பு நடவு செய்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என அவர் கூறினார் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, அட்மா தலைவர்தலைவர் நவலடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.