மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் போது,
திடீரென அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில்: நெல் கொள்முதல் நிலையத்தை, பாதியிலேயே நிறுத்தி விட்டதால் இன்னும் அறுவடை செய்ய முடியாமல் உள்ள நெற்கதிர்களை, அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் கதிர்கள் வயல்களில் உள்ளது. அவைகளுக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத நிலையில், அருகில் வாடிப்பட்டிக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிக அளவில் போக்குவரத்து செலவுகளும் கூடுதல் செலவுகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகையால், இங்கு நடைபெற்று வந்த நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து, நடத்த வேண்டும். அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் நிலையத்தை அரசு நடத்த வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்