நாமக்கல்:
இலங்கை அகதிகள் தொழில் துவங்கி மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும், இலங்கை தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு கடன் உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து, மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு மூலம் கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
இந்த கடன் உதவி பெற, அகதிகள் முகாமில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும், 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒற்றைப்பெற்றோர் மட்டும் உள்ளோர், போன்ற சிறப்பு பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனைத்து இலங்கைத் தமிர்களும் இலங்கை தமிழர்களுக்கான சிறு கடன் உதவி திட்டத்தின்கீழ், தாங்கள் தொடங்கவுள்ள வணிகம் தொடர்பான திட்டத்தின் திட்ட அறிக்கையினை கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
சுயதொழில் மேற்கொள்ளும் திறன் கொண்ட இலங்கை தமிழர்களுக்கு ரூ. 1 லட்சம்- முதல் 2 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். கடன்தொகையில் 30 சதவீதம் பின் இறுதி மானியமாக, நிதி நிறுவனத்தால் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
திருப்பி செலுத்தும் கடன்தொகை அரசு விதிகளின்படி, மாதாந்திர தவணைகளில், நிதிநிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 5 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, அகதிகள் மறுவாழ்வு அலுவலக தனி தாசில்தாரை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.