Close
டிசம்பர் 5, 2024 2:37 காலை

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஈரோட்டில் முழு கடையடைப்பு..!

ஈரோட்டில் மூடப்பட்டிருக்கும் கடைகள்

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் இன்று பாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனத்தின் கட்டிட வாடகை மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு இன்று (நவம்பர் 29ம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வணிகர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை.

வணிகர் சங்க நிர்வாகிகள்

இதுமட்டுமல்லாமல் மாநில அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் வணிகர்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதாகவும் அதனால் வாடகை மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோட்டில் இன்று (நவம்பர் 29ம் தேதி ) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 75 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, இன்று ஈரோட்டில் ஜவுளி சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. சிறிய ஜவுளிகடைகளில் இருந்து பெரிய ஜவுளி நிறுவனங்கள் வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போல மஞ்சள் சந்தையும் இன்று இயங்கவில்லை. மேலும் எலக்ட்ரிக்கல் கடைகள், அரிசி மண்டி, நகைக் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பரபரப்பாக இயங்கும் முக்கிய சாலைகளான பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, சத்தி சாலை, ஆர்.கே.வி.சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக இன்று ஈரோட்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top