நாமக்கல்:
மோகனூர் அருகே அதிகாலை நடைப்பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதியதால், கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில், அதிகாலை நேரத்தில் ஏராளமானவர்கள் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலை 5 மணியளவில், நாமக்கல் – மோகனூர் மெயின் ரோட்டில், காட்டூர் பெட்ரோல் பங்க் அருகே, ராசிபாளையத்தைச் சேர்ந்த மலையண்ணன் (70), அவரது மனைவி நிர்மலா (55), அதே பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் (65) ஆகிய மூவரும் வாக்கிங் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது லேசான மழை பெய்தது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அந்த நேரத்தில் நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு ஆம்னி கார் அவர்கள் மீது மோதியது. இதனால் தூக்கிவீசப்பட்ட மூவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்ததும், மோகனூர் போலீசார் விரைந்து வந்து, காருக்கு அடியில் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதணைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டிந்த மோகனூர் பாம்பாட்டி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த செல்லம்மாளின் மகன் உடல்நலக்குறைவால் 5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தற்போது அவர் உட்பட அதே பகுதியைச் சேர்ந்த மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது மோகனூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.