திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பல்லி, ஓணான்களை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய், மலேசியா, வியட்நாம், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரி்ல் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணி தனது உடைமைகளில் சில டப்பாக்களை மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அந்த டப்பாக்களில் பல்லிகள் மற்றும் ஓணான்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச விதிமுறைப்படி இப்படி வன விலங்குகள் மற்றும் ஊர்வனவற்றை விமானத்தில் கடத்தி வருவது குற்றமாகும்.
எதற்காக அந்த நபர் இவற்றை கடத்தி வந்தார் என தெரியவில்லை. ஏதாவது மருந்து தயாரிப்பதற்காக கடத்தி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கமாக திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம் தான் பறிமுதல் செய்யப்படுவது உண்டு. இந்த நிலையில் தற்போது அவற்றிற்கு பதிலாக பல்லிகளும்,ஓணான்களும் சிக்கி இருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.