நாமக்கல் :
திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே, மலைவேப்பங்குட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், தனியார் மில் பணியாளர். இவரது மகன் பூந்தமிழன் (20). இவர், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் (ஐ.டி.), முதலாமாண்டு படித்து வந்தார்.
இவரது நண்பர், ராசிபுரம் அருகே, புதுப்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மகன் ராகுல் (20). அவர் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் அரசு கலைக்கல்லூரியில் முதல் ஆண்டு பி.எஸ்சி (இயற்பியல்) படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை ராகுல் அவரது நண்பரான பூந்தமிழனை திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரி ஹாஸ்டலில் விடுவதற்காக அவரது மோட்டார் பைக்கில் இருவரும் சென்றுள்ளனர்.
காலை 9:15மணியளவில், எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அவர்கள் வந்தபோது, எதிர் திசையில் வந்த தனியார் பஸ் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் பைக்குடன் சேர்த்து தூக்கி வீசப்பட்ட, பூந்தமிழன், ராகுல் இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.