நாமக்கல்:
பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு புதிய முறையை ரத்து செய்து, வழக்கம்போல் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலேயே திருத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கம், பழங்குடியினர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு மற்றும் நிர்வாகிகள், தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற திங்கள்கிழமை முதல் அரையாண்டுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் 3.12.24 அன்று பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் துறையின், உதவி இயக்குநர் குமரகுருபரன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள தகவலில், தற்போது நடைபெற உள்ள 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, சேலத்தில் மையம் அமைத்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும்,
தற்போது பாடம் நடத்தக்கூடிய அந்தந்த பள்ளி ஆசிரியர்களே மாணவர்களின் விடைத் தாள்களை மதிப்பீடு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளைப் பொறுத்தவரை மாணவர்களின் தேர்வு சார்ந்த மனநிலை மற்றும் அவர்களது தேர்வு எழுதும் திறன்களை ஆசிரியர் கணிப்பதற்கும், மாணவர்களுக்கு எந்த பயிற்சி அளிக்கலாம் என திட்டமிடுவதற்கும் ,மாணவர்கள் எழுதக்கூடிய காலாண்டு தேர்வு, அரையாண்டுத் தேர்வு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தேர்வுகளில் மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களே திருத்தும் போது, மாணவன் வினாக்களுக்கு விடையளிக்கும் பகுதியில், எந்தெந்த பகுதியில் அவன் சிறப்பாக தேர்வு எழுதுகிறான், எந்தெந்த பகுதியில் விடையளிக்க திணறுகிறான். எந்தெந்த பகுதிக்கு விடை அளிக்கவில்லை. அவனுக்கு எந்தெந்த பகுதியில், கூடுதலாக பயிற்சி அளிக்க வேண்டும் போன்ற திட்டமிடல்கள் சார்ந்து பாட ஆசிரியரின் மனதிலும் பதியும்.
மேலும் மாணவனது விடைத்தாளிலும் ஆசிரியர் குறிப்பு எழுதி அதன் அடிப்படையில் விடைத்தாளை வழங்கும்போது அந்த மாணவர்களை தனியாக பிரித்து, அதற்கேற்றபடி வகுப்பில் பாட பயிற்சிகளை வழங்கி அவர்களை பொது தேர்வில் தேர்ச்சி பெற வைப்பார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.
மேலும் அரையாண்டு தேர்வு விடைத்தாட்களை பொறுத்த அளவில், பள்ளிக்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களே அதை மதிப்பீடு செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு முரணாக பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை சேலத்தில் பொதுத்தேர்வு மையம் அமைத்து,
விடைத்தாள்களை மாற்றி திருத்தம் செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருப்பது இதுவரை தமிழகத்திலும், வேறு பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட எந்த துறையிலும் இல்லாத ஒரு அறிவிப்பாக உள்ளது. மேலும் இது அனைத்து ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது.
எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து பழங்குடியினர் நலத்துறை பள்ளி, 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்த பள்ளி பாட ஆசிரியர்களே மதிப்பீடு செய்யலாம் என்று அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.