நாமக்கல் :
நாமக்கல் அருகே ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, குமாரிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கங்காநாயக்கன்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, தினசரி காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
6 மாதத்திற்கு முன், மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, மாற்று மின் மோட்டாரைக் கொண்டு, சொற்ப அளவில் குடிநீர் சப்ளை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. இது குறித்து, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், இன்று காலை, 8:30 மணிக்கு, தோப்பூர் அருகே, மோகனூர் – நாமக்கல் மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக மோகனூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பஸ்கள், லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் ரோட்டில் நிறுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிக்கு செல்லம் மாணவ மாணவிகளும், அரசு வேலைக்கும், பல்வேறு பணிகளுக்கும் செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த தாசில்தார் தாசில்தார் மணிகண்டன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் விநியோகத்தை சீரமைத்து, விரைவில் முறையாக குடிநீர் வழங்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் நாமக்கல் -மோகனூர் மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.