நாமக்கல் :
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நில சர்வேயர் சங்கத்தினர், தாலுகா அலுவலகங்களில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின், மாநில செயற்குழு கூட்டம், கடந்த, 24ம் தேதி, நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.9ம் தேதி, தாலுகா அலுவலகங்களில் உள்ளிருப்பு இயக்கம், 19ல் ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு, 2025, ஜன. 22 முதல், 23 வரை 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும், தாலுகா அலுவலகங்களில், சர்வேயர்கள் சங்கத்தினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு, ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனரின் பணிகளையும், கடமைகளையும் மண்டலத்துணை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோருக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தரமிறக்கப்பட்ட குறுவட்ட சர்வேர் பதவிகளை பெற்று, தகுதியான சர்வேயர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்ட துணைத்தலைவர்கள் பாரதி, ஜெயத்துரை, மாவட்ட, கோட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான சர்வேயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நில அளவைப்பணி பாதிக்கப்பட்டது.