நாமக்கல் :
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 535 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
அவற்றை பரிசீனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி விரைந்த நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5.73 லட்சம் மதிப்பில் பயிர்க்கடனுதவி, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் திருமண உதவித்தொகை மற்றும் 2 நபர்களுக்கு தலா ரூ.55,000 வீதம் இயற்கை மரண உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பேருக்கு ரூ.8,613மதிப்பில் காதொலிக்கருவிகள், ஒருவருக்கு ரூ.580 மதிப்பில் எல்போ ஸ்டிக் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.48,993 மதிப்பில் ஆர்பிட் ரீடர் என மொத்தம் 19 நபர்களுக்கு ரூ.9.01 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக, பீகார் மாநிலத்தில் டிசம்பர் 2 முதல் 5 வரை நடைபெற்ற தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் ஜூனியர் பிரிவில் 3 இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்ற, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சந்தோஷýக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.