புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தபால் பிரித்து அனுப்பும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடி, திருச்சியோடு இணைப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சிகள் மற்றும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சங்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் .செந்தில், விடுலைச் சிறுத்தைகள் சட்சி மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், காங்கிரஸ் கட்சி சார்பில் இப்ராஹிம் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்; நாடிமுத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்புமணவாளன், பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலாளர் புதுகை பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் .ஜனார்த்தனன், செயலாளர் மகாதீர், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் வெற்றி
முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து திருச்சி அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் சிவாஜிக்கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்தையில் வட்டாட்சியர் பரணி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அலுவலகத்தை ஒன்றிய அரசின் இணைப்பது என்ற உத்தரவை நிறுத்தி வைப்பது எனவும், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து ஆர்எம்எஸ் அலுவலகம் செயல்படுவது என்ற எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.