திருச்சி:பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் என்எஸ்எஸ் மாணவர்களும், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து பூச்செடிகள் நடும் முகாமை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தின.
மூத்த சமூக ஆர்வலர் பாரதி தலைமையில் சைன் திருச்சி அமைப்பின் தலைவர் விக்னேஷ்வரன் பூச்செடிகளை நட்டு இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
விக்னேஸ்வரன் பேசுகையில் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். காடுகள் உலகின் காலநிலை அமைப்பில் ஒரு முக்கிய இணைப்பாக அமைகின்றன. மரங்கள் மண்ணரிப்பு மற்றும் வெள்ளத்தை தடுக்கின்றன. மக்கள், குறிப்பாக மாணவர்கள், அதிகமாக மரங்களை நட்டு அவற்றை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும் என்றார்.
சுந்தர்ராஜ் நகர் பொதுமக்களும் மாணவர்களும் அடுக்கு மல்லி, துளசி, நத்தியாவட்ட, ஜெட்ரோபா மற்றும் பலவகையான பூச்செடிகள் நட்டனர். தாங்கள் நட்ட பூச்சொடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி சரியான முறையில் பாதுகாப்போம் என்று பள்ளி மாணவர்கள் உறுதி கூறினர்.
சமூக ஆர்வலர் பாரதி பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் என்எஸ்எஸ் மாணவர்களின் சேவையை பாராட்டினார்.
முகாமில் முருகேசன், தலைவர், திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி சங்கம் பேராசிரியர் ரவி, பிஷப் ஹீபர் கல்லூரி, முன்னாள் என்எஸ்எஸ் அதிகாரி, நிதீஷ்குமார், முன்னாள் என்எஸ்எஸ் மாணவர் தலைவர், பிஷப் ஹீபர் கல்லூரி, மற்றும் சுந்தர்ராஜ் நகர் மூத்த குடிமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.