நாமக்கல் :
செல்போனுக்கு பதில், ஷாம்பூ அனுப்பிய ஆன்லைன் விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ. 44,519 ரூபாய் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் ராமாபுரம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (36). அவர், ஆன்லைன் வெப்சைட்டில் செல்போன் ஒன்றை பார்வையிட்டுள்ளார். பின்னர், அதில் குறிப்பிட்ட கோவையைச் சேர்ந்த டீலருக்கு, கிரடிட் கார்டு மூலம் ரூ. 24,519 செலுத்தி போனை ஆர்டர் செய்துள்ளார்.
அடுத்த நாள், கூரியர் மூலம் சரவணகுமாரின் முகவரிக்கு பார்சல் வந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது பார்சலுக்குள் தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூ சிறிய பாட்டில் ஒன்று இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த சரவணகுமார், இது குறித்து ஆன்லைன் விற்பனை வெப்சைட்டிற்கு இ-மெயில் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால், சரவணகுமார் செலுத்திய பணத்திற்கான மொபைல் போனை அந்த நிறுவனம் வழங்கவில்லை. மேலும் புகார் செய்த வாடிக்கையாளரின் கணக்கை ஆன்லைன் விற்பனை வெப்சைட் நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
இதையொட்டி, ஆன்லைன் விற்பனை வெப்சைட் மீதும், செல்போன் டீலர் மீதும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், கடந்த ஜூன் மாதம் சரவணகுமார் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அதில், சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் ஆன்லைன் விற்பனை வெப்சைட் நிறுவனமும், அதன் செல்போன் டீலரும் சேவை குறைபாடு புரிந்துள்ளதை வழக்கு தாக்கல் செய்தவர் நிரூபித்துள்ளார்.
வாடிக்கையாளர் செலுத்திய, தொகை ரூ. 24,519 மற்றும் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக, ரூ. 20,000 என, மொத்தம் ரூ. 44,519ஐ, 4 வாரத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க, ஆன்லைன் வெப்சைட் நிறுவனத்திற்கும், அதன் டீலருக்கும் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.