Close
டிசம்பர் 23, 2024 10:33 காலை

அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் : டிடிவி..!

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த டிடிவி

அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும் என்று அமுமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில்  செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதி விடுவாா். அதிமுக தொண்டா்கள் ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம், சுயநலம் தவிர வேறு எதுவும் தெரியாது. பதவியில் இருப்பதற்காக யார் காலையும் பிடிப்பார். எந்த துரோகத்தையும் செய்வார். என் பெயரை கூட சரியாக சொல்லத் தெரியாத எடப்பாடி பழனிசாமியின் கப்பல் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில்தான் அரங்கேறும். 1974-ல் கச்சதீவை முதல்வராக இருந்த கருணாநிதி தாரை வார்த்து கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய அரசுக்கும் தலைவலியாக இருக்கிறது. நட்புறவு நாடாக இருப்பதால், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் மீட்கப்படுகின்றனர். காவிரி ஒப்பந்தத்தையும் காலாவதியாக்கி விட்டார். டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது.

நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ். விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு கோப்புகளில் கையெழுத்திட்டவர், இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

டங்ஸ்டன், நல்ல செய்தி வரும்

டங்ஸ்டன் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக. இப்போது கபட நாடகம் ஆடுகிறது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இந்த திட்டம் வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளனர். நல்ல செய்தி வரும்.

கூட்டணி அமைச்சரவை

தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக கூறுகிறது. திமுகவுக்கு எதிராக மக்கள் சக்தி ஒன்று திரண்டுள்ளது. பழனிசாமி ஆட்சி மீதிருந்த கோபத்தால் திமுக திருந்திருக்கும் என்று அவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர்.

பாஜகவுக்கு எதிராக மக்களை ஏமாற்றியும், பூச்சாண்டி காண்பித்தும் திமுகவும் பேசியது. இப்போது மக்களுக்கு புரிந்துவிட்டது. தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். சிறுபான்மையின பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களை, சிறுபான்மையினரே முறியடிப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை அமைக்கும்.

3 மாதத்தில் கட்டப்பட்ட பாலம்

சாத்தனூர் அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே குறைத்திருந்தால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்காது. திமுக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த மாவட்டத்திலேயே 3 மாதத்தில் கட்டப்பட்ட பாலம், அடித்து செல்லப்பட்டுள்ளது என்றால், ஆட்சியில் முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எதிர்கட்சிகள் அச்சப்பட வேண்டாம். எதிர்க்கும் அளவுக்கு குறைபாடு இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். எங்கள் கூட்டணி பலம் பெறும். திமுகவை வீழ்த்தும் சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என மக்களுடன் இணைந்து எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதை சடங்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியது சரியில்லை.

அம்பேத்கர் குறித்து தனக்குள்ள உயர்வான கருத்தை அறிக்கை மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார். அரசியல் செய்வதற்காக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகிறது.

தமிழகத்தில் கஞ்சா, போதை மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. முதல்வர், அமைச்சர் குடும்பத்தை தவிர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்றாா் டி.டி.வி. தினகரன்.

ராமதாஸ்- டிடிவி திடீர் சந்திப்பு

திருவண்ணாமலையில் நடந்த உழவர் பேரியக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

அதேபோல், கட்சி நிர்வாகியின் திருமணத்துக்காக வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதே ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில், இருவரும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் வரவேற்பு அறையில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, பாமக நிறுவனர் ராமதாசும், டிடிவி தினகரனும் ஒருவருக்கு ஒருவர் நலன் விசாரித்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top