திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.35 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் காலனியில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் நவீன சமுதாயக் கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த புதிய சமுதாய கூடம் கட்டிடத்தில் தரைத்தளத்தில் நுழைவுக் கூடம், வரவேற்பு அறை , அலுவலகம் 175 நபர்கள் அமரும் வகையில் உணவு கூடம், சமையலறை சமையல் எரிவாயு கூடம், பொதுக்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடனும், முதல் தளத்தில் 450 நபர்கள் அமரும் வகையில் மணமகள் அறை மணமகன் அறை, திருமண கூடம், மின்தூக்கி, உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
மேலும் சுற்றிலும் சாலை அமைத்தல், கால்வாய் வசதி ஏற்படுத்துதல், சமையல் பொருட்கள் வாங்குதல், மேசை மற்றும் நாற்காலி வாங்குதல், இருக்கைகள் வாங்குதல் உள்ளிட்டவற்றை குறித்து அமைச்சர் ஆய்வு செய்து கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து காந்தி நகரில் 2.67 ஏக்கா் பரப்பளவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.32.50 கோடியில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வணிக வளாகத்தின் தரை தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகள், முதல் தளத்தில் 121 பூ கடைகள் என மொத்தம் 249 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்விரு பணிகளையும் புதன்கிழமை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடைகளுக்கு தேவையான விற்பனை பொருட்களை மேல் தளங்களுக்கு வாகனங்கள் மூலம் எடுத்து செல்லு வகையில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட உள்ளது தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது மீதி உள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம், வட்டாட்சியா் துரைராஜ், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்