மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,
இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மேல பெருமாள் பட்டி கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர் அதுவும் மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேஷன் பொருட்கள் இந்த இரு கிராமத்திற்கும் வழங்கப் படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வழங்குவதையும் முன்னறிவிப்பின்றி திடீரென வழங்குவதால் வேலைக்கு செல்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் தங்களுக்கு மணல் பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கடந்த ஏழு வருடங்களாக அரசின் அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர்,
அதற்கு தீர்வு எட்டப்படாத காரணத்தால் இன்று மணல் பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விக்கிரமங்கலம் உசிலம்பட்டி சாலையில் மணல் பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியலால் பொதுமக்கள் மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மறியலில் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சி சுப்பிரமணியன் பொதுமக்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சி சுப்பிரமணியன் கூறும் போது கடந்த ஏழு வருடங்களாக இரண்டு கிராமத்திற்கும் பகுதிநேர ரேசன் கடை கேட்டு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இரண்டு கிராம மக்களுக்காக நானும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டுள்ளேன்
இனிமேலாவது அதிகாரிகள் இரண்டு கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். ஏற்கனவே பலமுறை போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில் அதிகாரிகள் வந்து ஒரு மாதத்தில் அமைத்து தருவதாக வாக்குறுதி தந்து சமாதானப்படுத்தி சென்றனர்
ஆனால் வாக்குறுதி அளித்தபடி அமைத்து தராததால் தற்போது மறியலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது இரண்டு கிராம மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்
இதனை தொடர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஜனவரி மாதத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்