Close
டிசம்பர் 27, 2024 8:07 மணி

நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி கைது

விவசாயி திருமுருகன்.

நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில், 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் தாலுகா, நரவலூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், விவசாயி. இவர் கடந்த அக்டோபர் மாதம், அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த உள்ள மரத்தை, அனுமதியின்றி வெட்டியுள்ளார்.

இதனை அறிந்த நரவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த திருமுருகன் விஏஓ ராமனை தாக்கியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருமுருகன் பயந்து தப்பி ஓடிவிட்டார்.
அவரை உடனடியாக கைது செய்யக்கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அவரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, 5 நாட்கள் நடந்த போராட்டம் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, திருமுருகனை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கடந்த 3 மாதமாக திருமுருகனை தேடி வந்த நிலையில், நல்லிபாளையம் போலீசார் நேற்று விவசாயி திருமுருகனை கைது செய்தனர். அவரிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top