Close
ஏப்ரல் 2, 2025 1:28 காலை

நீதிமன்ற உத்தரவின்படி உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும்: முதல்வருக்கு முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் இது நிறுத்தப்பட்டது.

அதற்கு பதிலாக மத்திய அரசு வழங்கும் ஒருமுறை ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 10.3.2020க்கு முன்னர் உயர் கல்வி முடித்து இன்னும் ஊக்க ஊதிய உயர்வை பெறாமல் உள்ளனர்.

அதில் ஏறக்குறைய 5,000 ஆசிரியர்கள் மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளனர். தனி நீதிபதி மற்றும் இருநபர் அமர்வில் தீர்ப்பை ஆசிரியர்களுக்கு சாதகமாக பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற  தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிகிறது. இதனால் முன்னாள் முதல்வர் அண்ணா காலத்து உயர் கல்விக்கான ஊக்க ஊதியம், பழைய முறையில் நமக்கு கிடைக்கும் என்று காத்திருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கும் விசயத்தில், தமிழ்நாடு அரசு சார்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல், தற்போதைய உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஊக்க ஊதிய உயர்வை அனுமதித்து உடனடியாக வழங்க உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top