நாமக்கல், பரமத்தி ரோட்டில் மாநகராட்சி எல்லையில் உருவாகி வரும் குப்பை மலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல், பரமத்தி மெயின் ரோட்டில், மாநகராட்சிக்கு உட்பட்ட, காவேட்டிபட்டி அருகே, தனியார் கல்யாண மண்டபத்திற்கு எதிரில், வனத்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது.
மெயின் ரோட்டின் வலதுபுறம் மற்றும் இடது புறத்தில் குளங்கள் உள்ளன. இந்த குளக்கரை பகுதியில், மெயின்ரோடு ஓரத்தில் சுமார் 200 மீட்டர் தூரம், வெளியில் இருந்து வாகனங்களில் கொண்டுவந்து குப்பைகள், கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருந்துக்கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுகின்றன.
இந்த இடம் வள்ளிபுரம் பஞ்சாயத்து எல்லையில் உள்ளது. மாநகராட்சி எல்லைக்கும், வள்ளிபுரம் பஞ்சாயத்து எல்லைக்கும் மத்தியில் இந்த குப்பைகள் மலைபோல் குவிந்து வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்÷கேடு, ஏற்படுகிறது.
அடிக்கடி அதில் தீப்பிடித்து, புகை மண்டலம் உருவாகி வருவதால் அவ்வழியாக நடந்துசெல்வோரும், வாகனங்களில் செல்வோரும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை உருவாகி உள்ளது.
எல்லையில் இருப்பதும் வள்ளிபுரம் பஞ்சாயத்து மற்றும் நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் ஆகிய இருவரும் குப்பை மலையை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது.
வள்ளிபுரம் பஞ்சாயத்து அல்லது, நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் மூலம் இந்த குப்பை மலையை அகற்றவும், மீண்டும் அங்கு குப்பை சேராமல் இருக்கவும், மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.