Close
ஜனவரி 7, 2025 7:33 காலை

திருமண பதிவு நடைமுறைகள் மாற்றம்?

தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை அறிந்ததே. அதற்காக தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்துக்கொள்ள முடியும்.

அதற்குப்பின்னர் 2020ம் ஆண்டில் இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் மேற்கொண்டது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் இந்தப்பகுதியில் வசிக்கிறார்களோ அந்த பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்து செய்யலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டது.

ஆனால் பலரும் திருமணத்தை பதிவு செய்ய வருவதில்லை என்பது தெரியவந்தது. திருமணப் பதிவுக்கு ரூ.300 கட்டணம் என்று நிர்ணயித்துள்ள நிலையில் சில இடங்களில் ரூ.5,000 வரை கேட்பதாக புகார் எழுந்தது. இப்படி எழும் சில நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்பவர்களுக்கு இது பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top