Close
ஜனவரி 9, 2025 3:32 காலை

போதைக்காக அதிக மருந்தை பயன்படுத்திய தனியார் பார்மசி கல்லூரி மாணவர் பலி

போதைக்காக அதிக மருந்தை செலுத்திக்கொண்டதால் உயிரிழந்த, தனியார் பார்மசி கல்லூரி மாணவர் சந்தானகோபாலன்.

போதைக்காக அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மருந்தை பயன்படுத்திய தனியார் பார்மசி கல்லூரி மாணவர் உயிரிழந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலமாக கிடந்த சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் சந்தானகோபாலன் (22). இவர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பார்மசி கல்லூரியில், 4ஆம் ஆண்டு பார்மசி (பி.பார்ம்) படித்து வந்தார்.

இவரை கல்லூரி சார்பில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், வழக்கம் போல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாணவர் சந்தானகோபாலன், மூன்றாம் தளத்தில் உள்ள பெண்கள் வார்டில் பணியாற்றி வந்தார்.

அப்போது அங்குள்ள சக நண்பர் ஒருவரிடம் கழிப்பறை சென்று வருவதாக கூறிவிட்டு டாக்டர்கள் பயன்படுத்தும் டாய்லெட்டிற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த சக நண்பர்கள், காலை 11 மணியவில், டாய்லெட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வாயில் நுரை தள்ளிய நிலையில் சந்தானகோபலான் மயங்கி கிடந்துள்ளார்.

மருத்துவமனை டாக்டர்கள் மாணவர் சந்தான கோபாலனின் உடலை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர் சந்தானகோபாலன் பயன்படுத்திய கழிவறையை ஆய்வு செய்தபோது அதில் 2 வகையான வலி நிவாரண மருந்து குப்பிகளும், ஊசியும் கிடந்துள்ளது.

இதனையடுத்து, மாணவர் சந்தான கோபாலன், போதைக்காக, அளவுக்கதிகமாக வலி நிவாரண மருந்தை பயன்படுத்தியதால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், சக நண்பர்களிடம் விசாரணை செய்ததில், சந்தான கோபலனுக்கு ஏற்கனவே போதைக்காக வலி நிவாரண மருந்துகளை ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்தத தெரியவந்தது.

இதற்கிடையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்து கிடங்கில் இருந்து, மாணவர் வலி நிவாரண ஊசி மருந்துகளை திருடி சென்று பயன்படுத்தினாரா என்பதும் குறித்தும், மருந்து கிடங்கில் உள்ள மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு நடத்த அரசு மருத்துவக் கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி உத்தரவிட்டுள்ளார்.

போதைக்காக அளவுக்கு அதிகமாக வலிநிவாரண மருந்தை பயன்படுத்தி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாய்லெட்டில் மாணவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top