Close
ஜனவரி 8, 2025 8:04 காலை

பழனி முருகன் கோவிலில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: 5 பேர் மீது எஸ்.பியிடம் புகார் மனு

பழனி முருகன் கோவிலில், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ. 32 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தரக் கோரி, 2 பேர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நல்லுசாமி, இவரது மகன் கவின்குமார் (23). பி.எஸ்.சி., முடித்துள்ள இவர், கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்துள்ளார். இவரிடம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிலர், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உதவியாளராக நேரடி நியமனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

அதை உண்மை என நம்பிய கவின்குமார், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கிற்கு ரூ. 17 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதுடன், கவின்குமாரை பழனி கோவிலுக்கு நேரடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஒருவரை கோவில் மேலாளர் என அறிமுகம் செய்து வைத்ததுடன், கோவிலின் பெயர் மற்றும் பதவியின் பெயரை குறிப்பிட்டு ஐ.டி. கார்டும் வழங்கி உள்ளனர். ஜாய்னிங் ஆர்டர் கிடைத்ததும், பணியில் வந்து பொறுப்பேற்கு வேண்டும் என கூறியுள்ளனர். அதை தொடர்ந்து, பல நாட்களாகியும் கோவிலில் இருந்து அழைப்பு வரவில்லை.
அதனால், பணம் பெற்றுக்கொண்டு அந்த நபர்கள், போலி நியமன ஆணை தயார் செய்து கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கவின்குமார், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு தரும்படியும், நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதே கும்பல், பி.காம்., முடித்து விட்டு, வேலை தேடிக் கொண்டு இருந்த எருமப்பட்டியை சேர்ந்த ரெங்காஸ்ரீ (27) என்ற பெண்ணிடமும், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கம்ப்யூட்டர் பிரிவு இன்ஜினியராக வேலை வாங்கித் தருவதாக கூறி, 15 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளனர். இதையொட்டி ரெங்காஸ்ரீயும், நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

ஒரே கும்பலைச் சேர்ந்த, 5 பேர் கொண்ட நபர்கள், பழனி கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 2 பேரிடமும், ரூ. 32 லட்சத்து, 16,000 ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top