நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 635 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அட்டைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், தாட்கோ மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமா, 3 தூய்மைப்பணியாளர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அட்டைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசால் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. அந்த வாரியம் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
நலவாரியத்தில் பதிவு செய்யப்படும் தூய்மைப்பணியாளர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக நலவாரியத்தில் பதிவு செய்யப்படும் தூய்மைப்பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் திருச்செங்கோட்டில் 148 தூய்மை பணியாளர்கள், சேந்தமங்கலத்தில் 42 பேர், கொல்லிமலையில் 13 பேர், மோகனூரில் 56 பேர், நாமக்கல்லில் 77 பேர், பரமத்தி வேலூரில் 75 பேர், ராசிபுரத்தில் 116 பேர் மற்றும் குமாரபாளையத்தில் 108 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 635 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது, என அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட தாட்கோ மேலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.