திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அக்னித் தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது. அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு. 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.
மார்கழி மாத பவுர்ணமி ஜனவரி திங்கள் கிழமை அதிகாலை 4.49 மணியளவில் துவங்கி, ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 4.07 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில் இயக்கம்
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டி எண் 06130 விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காலை 9:25க்கு வருகிற 13-ந் தேதி புறப்படும். இந்த ரயிலானது 11:10க்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் மறு மார்க்கத்தில் 06129 திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு மதியம் 12:40க்கு புறப்படும் ரயிலானது விழுப்புரத்திற்கு மதியம் 2:15க்கு வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து தண்டரை, அந்தமண்டப்பள்ளம், ஆதிச்சனூர் , திருக்கோவிலூர் , அயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரம் வந்தடையும்.