Close
ஜனவரி 14, 2025 10:33 மணி

மாா்கழி மாதப் பெளா்ணமி; திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

கிரிவலம் வரும் பக்தர்களின் கூட்டம்

மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

இந்தநிலையில், மாா்கழி மாதப் பெளா்ணமி திங்கட்கிழமை அதிகாலை 4.50 மணிக்குத் தொடங்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.07 மணிக்கு நிறைவடைந்தது.

இதையடுத்து, தொடர் விடுமுறையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதலே ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வரத்தொடங்கினா். திங்கட்கிழமை காலை 9 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

விடிய, விடிய பல லட்சம் பக்தர்களின் கிரிவலம் தொடர்ந்தது. ஓம் நமசிவாய என ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பௌர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, நேற்று அதிகாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று ஆருத்ரா தரிசனம் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.

சிறப்புப் பேருந்துகள்..

கிரிவல பக்தா்கள் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், புதுவை, தெலங்கானா மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்தப் பேருந்துகள் நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top