Close
ஜனவரி 15, 2025 12:02 மணி

அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

ஜேடர்பாளையத்தில் அமைந்துள்ள அல்லாள இளைய நாயக்கர் சிலைக்கு, அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்

அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையத்தில் 1640 ஆம் ஆண்டில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணைக்கட்டி, ராஜ வாய்க்காலை ஏற்படுத்தி, ஆண்டு முழுவதும் 6,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை உருவாக்கிக் கொடுத்தவர், அல்லாள இளைய நாயக்கர்.

அப்போது, அப்பகுதி அரைய நாடு என்று சொல்வழக்கில் இருந்தது. அந்த நாட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அல்லாள இளைய நாயக்கருக்கு, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தமிழக அரசின் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு, குவிமாடத்துடன் கூடிய சிலை அமைக்கப்பட்டது.

அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி அவரது பிறந்த நாள் அரசு விழாவாக நடைபெறும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இதையொட்டி, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அல்லாள இளைய நாயக்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top