திருச்சிசுந்தரராஜ் நகர் ஹைவேஸ் காலனியை சேர்ந்த 25 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் ஞாயிற்றுக்கிழமை காலை சுந்தரராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தூய்மை பிரச்சாரத்தை தொழிலதிபர் ஆர்.எம். ராமநாதன் தொடங்கி வைத்தார்.
மாணவ மாணவியர் பூங்கா முழுவதும் கிடந்த குப்பைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து பைகளில் நிரப்பி மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் ராமநாதன் பேசுகையில் மாணவர்கள் தங்களது பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சுத்தமாக இருக்கும் போது நோய் தொற்று ஏற்படாது. காகித்தினால் ஆன பொருட்களும் பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன. இது மக்குவதற்கு நாட்கள் எடுத்துக் கொள்வதால் மனித குலத்திற்கும் கால்நடைகளுக்கும் அதிகமான தீமைகளை தரும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை காப்பதற்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். தூய்மையை பேணுவதில் மாணவர்களின் பங்கு மற்றும் அதை பராமரிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதிமொழி நினைவூட்டியது.
சுந்தரராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் நகச்சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் மாணவர்களின் சேவையை பாராட்டி பேசும்போது, மாதத்திற்கு ஒரு முறை மாநகராட்சி பூங்காவில் தூய்மை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
சமூக ஆர்வலர்கள் பிரசன்னா உத்தமன், பிரிட்டோ, உடற்பயிற்சி பயிற்சியாளர் ரம்யா ஆகியோர் தூய்மை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டினர்.