அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம் சார்பில் இன்று மாலை 3 மணிக்கு திருச்சி போக்குவரத்து கண்டோன்மெண்ட் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். சம்மேளன நிர்வாகிகள் ஆர்.ராஜேந்திரன், துரை.மதிவாணன், சுப்பிரமணியன், என்.கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், சம்மேளன தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்கள் பணியாளர்கள் அலுவலர்களுக்கு மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு சம்பளம் உயர்வு ஏற்படுத்துவது நடைமுறையில் உள்ளது.
தற்போது போக்குவரத்து கழகங்களில் சுமார் 1,27,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு. கடந்த 2020 ம் ஆண்டு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்ட பொழுது மூன்றாண்டு ஒப்பந்தம் என்பது நான்காண்டாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 31.8. 23 உடன் ஒப்பந்தம் முடிவடைந்து விட்ட து. 1.9.23 முதல் 15 வது ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு சம்பள உயர்வு ஏற்படுத்தி இருக்கவேண்டும். ஒப்பந்தம் பேசப்படாததால் இரண்டு வருடமாக தொழிலாளர்கள் சம்பளத்தை இழந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக ஒப்பந்தம் பேசி புதிய சம்பளம் வழங்க வேண்டும், கடந்த. 1.4.23 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும்,95ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வை நீதிமன்ற தீர்ப்பின்படி உடன் வழங்க வேண்டும், கழக பேருந்துகளை தனியாரிடம் குத்தகைக்கு விடக்கூடாது, விழா மற்றும் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க கூடாது ,போக்குவரத்து கழகங்களில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், 30,000 காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், வாரிசுப்பணி அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வழங்கப்பட வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகை உடனுக்குடன் வழங்கிட வேண்டும், தரமான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்து அனைத்து பணிமனைகளுக்கும் வழங்க வேண்டும், பழைய பேருந்துகளை முழுமையாக நிறுத்த வேண்டும்,புதிய பேருந்துகள் இயக்க வேண்டும், பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், 1.4. 23 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண தமிழ்நாடு அரசையும், போக்குவரத்து கழக நிர்வாகங்களையும் ஏ ஐ டி யூ சி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் கே.சுரேஷ், மாவட்ட தலைவர் வே.நடராஜா, சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர்கள் கே.எம்.செல்வராஜ், என் . முருகராஜ், எம் . சுப்பிரமணியன், பி.பாஸ்கரன், ஓய்வு பெற்றோர் சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.நந்தாசிங் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.முடிவில்மாநில பொருளாளர் கே.நேருதுரை நன்றி கூறினார்.