Close
ஜனவரி 22, 2025 8:43 காலை

வாடிக்கையாளர் ஆன்லைனில் இழந்த பணத்தை திருப்பி வழங்க, வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளருக்கு, வங்கி நிர்வாகம் வட்டியுடன் திருப்பித்தருவதுடன், ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்செங்கோடு அருகே அணிமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வமூர்த்தி. இவர் கடந்த 2020 ஜூலை மாதம் வெப்சைட் மூலம் டீசர்ட் ஒன்றை வாங்க ஆர்டர் செய்துள்ளார். அதற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளார்.
பின் ஆர்டரை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப வழங்கும்படி வெப்சைட்டில் பதிவிட்டுள்ளார். உடனடியாக விஸ்வமூர்த்தியின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தான் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் அலுவலர் எனக் கூறி அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், ஒரு லிங்க்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவு செய்தால் பணம் உடனே திரும்ப அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி மொபைலுக்கு வந்த லிங்க்கினுள் விஸ்வமூர்த்தி உள்ளே நுழைந்து, விபரங்களை அனுப்பியுள்ளார்.
அடுத்த நிமிடம் விஸ்வமூர்த்தியின் பேங்க் அக்கவுண்டில் இருந்த சேமிப்பு பணம் ரூ. 96,895 அடையாளம் தெரியாத 4 வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பணம் எடுக்கப்பட்ட விவரம் உடனடியாக விஸ்வமூர்த்தியின் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வமூர்த்தி, இதுகுறித்து, வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாகவும், இமெயில் மூலமாகவும் புகார் செய்து பணத்தை மீட்டுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், பணத்தை மீட்டுத் தர வங்கி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து வங்கி மீது கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் விஸ்வமூர்த்தி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
இதன்படி, வாடிக்கையாளரின் புகாரை பெற்றுக் கொண்ட வங்கி நிர்வாகம், பணத்தை மீட்டுத்தர முயற்சி செய்யாதது வங்கியின் சேவை குறைபாடாகும். மேலும், மோசடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளருக்கு அந்த பணத்தை செலுத்த வேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

எனவே மோசடியான பண பரிவர்த்தனையால் ஏற்பட்ட இழப்பு ரூ.96,895ஐ மோசடி செய்த நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடனும் விஸ்வமூர்த்திக்கு வழங்க வேண்டும்.

மேலும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தையும், வாடிக்கையாளருக்கு, 4 வாரத்துக்குள் வங்கி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top