பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத, கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓய்வு நேரத்தில் அமர்வதற்கு வசதியாக, பணிபுரியும் இடங்களில் இருக்கைகள் அமைத்து தரவேண்டும் என்று தொழிலாளர் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தமிழகத்தில் முறையாக அமல்படுத்த வேண்டும் என, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின்கீழ், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதா, என்பதைக் கண்டறிய, நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் தொழிலாளர் துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, சரியான முறையில் தொழிலாளர்களுக்கு இருக்கை அமைத்து கொடுக்காத 12 கடைகள் மற்றும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.