Close
ஜனவரி 30, 2025 9:53 மணி

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் : அமைச்சர் திறந்து வைத்தார்…!

அணையிலிருந்து தண்ணீா் திறந்து வைத்த அமைச்சர்

சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது.

இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, 118.75 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி இருந்தது.எனவே, அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அணையின் வலது, இடதுப்புற கால்வாய்களில் தண்ணீா் திறந்து வைத்தாா்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க விவசாய பயன்பாட்டிற்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இடது புற கால்வாயிலிருந்து வினாடிக்கு 320 கன அடியும் வலது புற கால்வாயில் இருந்து வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் மே மாதம் 17ஆம் தேதி வரையிலான 110 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படும். 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் உற்பத்திக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, நீா்வளத் துறையின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா்கள் ராஜாராமன், சுகந்தி, உதவிப் பொறியாளா் சந்தோஷ், ராஜேஷ், ஸ்ரீசெல்வப்பிரியன், தாசில்தார் மோகனராமன், பிடிஓ ரவிச்சந்திரன், பாசன சங்க நிர்வாகி ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top