Close
ஏப்ரல் 17, 2025 12:34 காலை

கட்டுப்பாட்டை இழந்த லாரி: தண்ணீரில் மிதக்கும் எரிவாயு சிலிண்டர்கள்

தண்ணீரில் மிதக்கும் எரிவாயு சிலிண்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குடியாத்தம் காமாட்சியம்மன் கோயில் ஆயக்கரை தெருவை சேர்ந்தவர் நீலகண்டன். செங்கல்பட்டு அடுத்த படாளத்தில் உள்ள காஸ் கம்பெனியில் 8 ஆண்டுகளாக லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர்  கம்பெனியில் இருந்து 357 சமையல் காஸ் சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு குடியாத்தம் நோக்கி சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் திருவண்மாலை மாவட்டம்  செய்யாறு- ஆற்காடு சாலையில் மோரணம் ஏரிக்கரை வளைவில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் ஏரிக்குள் தலைக்குப்புற லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் சிதறி ஏரி தண்ணீரில் மிதந்தது. மேலும், இடிபாட்டில் சிக்கிய டிரைவர் நீலகண்டன் லேசான காயம் அடைந்தார்.

விபத்தை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் மோரணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இடிபாட்டில் சிக்கி தவித்த டிரைவர் நீலகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஏரியில் தண்ணீரில் மிதந்து வந்த சமையல் எரிவாயு உருளைகளை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் லாரி கவிழ்ந்து சிலிண்டர்கள் தண்ணீரில் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top