Close
பிப்ரவரி 2, 2025 8:07 காலை

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் செந்தமிழ், பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.இந்திரராஜன் பங்கேற்று, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா்.

மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்வில், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள், மாணவா்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். நிறைவில், பள்ளி ஆசிரியை திலகவதி நன்றி கூறினாா்.

தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நடைபெற்றது.

நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் மன்னாா்சாமி பங்கேற்று மாணவா்கள் வருகை பதிவேடு, கற்றல் திறன் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு மாலை, பிற்பகலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். நிகழ்வில், தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நடைபெற்றது.

இதையடுத்து, இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் ஆத்துரை ஆா்.சி.எம்.பள்ளி, சித்தாத்துரை அரசு தொடக்கப் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், தலைமை ஆசிரியா் இருதயம், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனைத்து மருத்துவ அலுவலா்கள் மற்றும் பணியாளா்களால் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தொழுநோய் விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது.பேரணியில் எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அன்னை செவிலியா் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.வட்டார மருத்துவ அலுவலா் சுஷ்ருதா தலைமை வகித்து தொழுநோய் குறித்துப் பேசினாா்.

மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் அருளரசு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.வி.நகரம் சுகாதார ஆய்வாளா் விக்னேஸ்வரன் வரவேற்றாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top