கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் உமா, இயற்கை விவசாயி சரவணனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். திரளான விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
குமரேசன் (விவசாயி): இந்தியாவில் சிக்கிம் மாநிலம், இயற்கை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. 1960 முதல் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி வருவதால், நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். மருத்துவமனைகளும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. ஆனால், நோய்களை குணப்படுத்த முடியவில்லை. அதனால், மாவட்டத்தில் ஒரு தாலுகாவை, முன் மாதிரியாக கொண்டு தாலுகாவாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை தாலுகாவை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கொல்லிமலை சுற்றுலாதலம் என்பதால், பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் ஆங்காங்கே கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுக்க எச்சரிக்கையும், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
துரைசாமி (விவசாயி): மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, வெங்காயம், மரவள்ளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், 2024ல், தொடக்க வேளாண் கூட்டுறவு சொசைட்டியில் பெற்ற பயிர்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு காரணமாக, பசும்பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 60 உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால், கூட்டுறவு ஒன்றியத்தில் உள்ள 500 சங்கங்களுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம்.
பூபதி (விவசாயி): எலச்சிப்பாளையம் ஒன்றியம், பள்ளபாளையம் ஏரி, நாமக்கல் ஒன்றியம் அணியார் பகுதியில், சீமை கருவேல மரங்களை அகற்ற வனத்துறையிடம் அனுமதி பெற்றுத்தந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது.
மெய்ஞானமூர்த்தி (விவசாயி): விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை, வன விலங்குகள் அழித்து நாசம் செய்கிறது. அதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது, பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை, 3 கி.மீட்டருக்குள் இருந்தால் சுடலாம் என, மத்திய அரசும், வனத்துறையும் அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.