Close
பிப்ரவரி 1, 2025 7:52 மணி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

எதிரியோ இல்லாத ஈரோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், அமோகமாக வெற்றிபெறுவார் என சிபிஐஎம் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.
நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சியின் நிதி அளிப்பு மற்றும் நூலக திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு சட்டசபை இடைத்தேர்தல் எதிரியே இல்லாத தேர்தல். திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அதேபோல் டில்லி இடைத்தேர்தலிலும் பாஜக அல்லாத ஆட்சி அமைந்தால் டில்லி மக்களுக்கு நல்லது.

வேங்கை வயல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழக அரசு காவல் துறையைக் கொண்டு கிராமத்தை கட்டுப்படுத்துவது ஏற்புடையது கிடையாது,

பெரியாரைப் பற்றி சீமான் பேசி வருவது ஏற்புடையதல்ல. அவர் பேச்சு அருவருக்கத்தக்கதாக உள்ளது. ஆதாரங்கள் இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு சீமான் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ் சமுதாயம் அவரை ஏற்றுக் கொள்ளாது.
மதுரை ஐகோர்ட்டில் சமீபத்தில் கிராமங்களில் கட்சிக்கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது. இதனை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

பல்கலையில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

 நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top