தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு திறப்பு விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று, மாவட்ட வருவாய் அலுவலர் மரு. செல்வசுரபி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி வருகிறது. அதில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புக்கள் மற்றும் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இன்றையதினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக்கள் என, மொத்தம் 27 கட்டடங்கள் ரூ.16.05 கோடி மதிப்பீட்டில் காணொலி காட்சி வாயிலாக தனது திருக்கரங்களால் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்.
அதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் ரூ.31.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கான கட்டடத்தினையும் , தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளது சிறப்பிற்குரியதாகும்.
மேலும், இவ்வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் வாயிலாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளை, பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு ஏதுவாகவும், அடிப்படையாகவும் இவ்வலுவலகம் அமைந்துள்ளது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் பி.அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் எஸ்.பரிமளா, சிங்கம்புணரி பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, 14-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தாயுமானவன், சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.