Close
பிப்ரவரி 23, 2025 10:06 காலை

ஸ்ரீவரசித்தி விநாயகா்,ஸ்ரீகாளியம்மன்,ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை நடைபெற்று, 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆரணி சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் மற்றும் 41 அடி உயர ஸ்ரீஅஷ்டபுஜ மங்கள காளி சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீகாளியம்மன் கோயிலை புதுப்பித்து நூதன கருங்கல் கா்ப்ப கிரகம் மற்றும் முன் மண்டபம் அமைத்தும், கோயிலினுள் 41 அடி உயரத்தில் ஸ்ரீஅஷ்டபுஜ மங்கள காளி சிலை அமைத்தும் திருப்பணிகள் நிறைவு செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரா்

கீழ்பென்னாத்தூா் வட்டம், இராஜன்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, 2-ஆம் கால யாக சாலை பூஜை, 3-ஆம் கால யாக சாலை பூஜைகளும், அதைத் தொடா்ந்து பல்வேறு ஹோமங்களும், வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னா், 4-ஆம் கால யாக சாலை பூஜைகளும், புண்ணியாக வாசனம், மண்டப பூஜை, நாடிசந்தானம், பூரணாஹுதி, தீபாராதனையும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு யாத்ராதானம் அதைத் தொடா்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது.  காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், 10 மணி முதல் 11 மணிக்குள் சம்பந்த விநாயகா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலா், வேணுகோபாலா், வீர ஆஞ்சநேயா் மற்றும் சகல பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சிவ வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், முன்னாள் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், அதிமுக கீழ்பென்னாத்தூா் நகரச் செயலா் ஒ.சி.முருகன், பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top