திமுகவை ஆட்சியில் இருந்த அகற்ற, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்பு விழா, மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்றது. பா.ஜ.க மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் விழாவில் கலந்துகொண்டு, புதிய தலைவர் சரவணனுக்கு பதவி ஏற்பு செய்து வைத்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திரமோடி, தன்னை கட்சியின் முதன்மை தொண்டனாக இணைத்துக் கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தற்போது, பா.ஜ.க வில், 17 கோடியே, 85 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். பாஜக நகர பொறுப்புகளில், 100க்-கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்.
மண்டல் எனப்படும் ஒன்றிய, நகர அளவில் பெண்களுக்கு அதிக அளவிலான பொறுப்புகளை வழங்கிய ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியிலும், ஒன்றிய, நகர அளவில் நிர்வாக பொறுப்புகளை பெண்களுக்கு வழங்கவில்லை. பெண்ணுரிமை பேசுகின்ற கட்சிகள், பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால், பா.ஜ.க அவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.
2025-26 மத்திய பட்ஜெட் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டுள்ளது என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைத்து சிந்தனையாளர்கள், அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள், நாட்டின் வளர்ச்சிமீது அக்கறை கொண்டவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியிலிருந்து, ஆட்சியின் இயலாமையை வெளிக்காட்டும் வகையில், தமிழகத்திற்கு எதுவும் அறிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் அறிக்கை விடுகின்றனர்.
தமது ஆட்சியின் மீது, ஏற்பட்டுள்ள சரிவையும், இயலாமையையும், திறமையின்மையை மறைப்பதற்காக மத்திய அரசின் மீது பழி சுமத்துகிறார்கள்.
தி.மு.க.வை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், தி.மு.க., வெற்றி பெற்று விடலாம் என கனவு காண்கிறார்கள். தி.மு.க.வுக்கு எதிராக இருக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளும், இந்த அரசு தவறான அரசு, இதனை வழி நடத்தும் தலைவர்கள் தவறானவர்கள், இவர்களை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
அதற்கான முன்னெடுப்புகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்களில், இதற்காக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.