இடையில் வட்டி குறைப்பு செய்தாலும், டெபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை பின் வட்டியுடன் சேர்த்து, கூட்டுறவு சங்கம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், 8 ஆண்டுகளாக நடைபெற்ற கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராசிபுரம் அருகே உள்ள அளவாய்ப்பட்டி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மகன்கள் நவீன் குமார் (34), பிரவீன் குமார் (32). இவர்கள் இருவரும் மைனராக இருந்தபோது ஒவ்வொருவருக்கும் ரூ. 18 ஆயிரத்தை கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முருகேசனின் தந்தை கருப்பண கவுண்டர், அளவாய்ப்பட்டியில் உள்ள, விநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்துள்ளார்.
டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டு 15 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 3,06,448- ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் வழங்குவதாக கூட்டுறவு சங்கம் டெபாசிட் சான்று வழங்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு கருப்பண கவுண்டர் இறந்துவிட்டார். நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் 18 வயது நிறைவடைந்த நிலையில் டெபாசிட் காலம் முடிவடைந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தை அணுகி பணத்தை கேட்டுள்ளனர்.
ஆனால், வட்டி குறைப்பு செய்து, 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி வழங்க உத்தரவு இருப்பதால், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மட்டுமே வழங்குவோம் என கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் மீது தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். கூட்டுறவு சங்கம் சார்பில் யாரும் ஆஜராகாததால், கோர்ட்டில் ஒருதலை பட்ச தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து கூட்டுறவு சங்கம் சார்பில் மாநில நுகர்வோர் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோரின் வழக்குகளை 2025 ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு 3 மாதத்தில் தீர்ப்பு வழங்குமாறு, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு, மாநில நுகர்வோர் கோர்ட் அனுப்பி வைத்தது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், ஜனவரி 20, 24, 27 ஆகிய 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், டெபாசிட் சான்றிதழில் உள்ளவாறு ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3,06,448- வழங்கவும், டெபாசிட் முதிர்ச்சி அடைந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ரூ 3,06,448- க்கு ஆண்டுக்கு, 6 சதவீத வட்டி சேர்த்து வழங்கவும் கூட்டுறவு சங்கம் ஒப்புக்கொண்டது.
8 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க, மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்ட நாளில் இருந்து, 8 நாட்களுக்குள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு முடித்து வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பிப். 24 ஆம் தேதிக்குள் முதிர்ச்சி தொகையும் அதன் பிந்தைய வட்டியையும் நவீன் குமாருக்கும், பிரவீன் குமாருக்கும் கூட்டுறவு சங்கம் வழங்க வேண்டும் என நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.