பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவ மணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (சீம) வகுப்பை சேர்ந்த மாணவ மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ 2,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2024-2025 -ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் யுஎம்ஐஎஸ் வெப்சைட் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 28ம் தேதியாகும்.
புதுப்பித்தல்:
ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-2025 ஆம ஆண்டில் 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
புதிய மாணவர்கள்:
நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணவர்கள். தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் https://umis.tn.gov.in/ என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்லூரி முதல்வர்கள் இந்த விவரங்களை, மாணவர்களுக்கு தெரிவித்து தகுதியுள்ள மாணவர்களை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்