Close
பிப்ரவரி 24, 2025 12:00 காலை

தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம்  குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்பிற்கு வரும் மார்ச் 3ம் தேதியும், பிளஸ் 1 வகுப்பிற்கு மார்ச் 5ம் தேதியும் தொடங்குகிறது. 10ம் வகுப்பிற்குமார்ச் 28 ல் தொடங்குகிறது. முன்னதாக 7ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், 15ல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பிராக்டிக்கல் தேர்வு துவங்குகிறது.

அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பள்ளிக்கல்வித்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்க, அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதுடன், தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் உமா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தினர்.

அதன்படி, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்.

பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம், உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top