Close
பிப்ரவரி 23, 2025 12:06 காலை

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: திமுக முன்னாள் கவுன்சிலர், கணவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய திமுக முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி அவரது கணவர் முருகேசன்

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது முருகேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வி கணவர் முருகேசன் கூறியதாவது:
திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அவினாசிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். திமுகவில் உறுப்பினராக உள்ளேன். எனது மனைவி தமிழ்ச்செல்வி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு 1வது வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் மல்லசமுத்திரம் அருகே உள்ள கிளாப்பாளையத்தைச் சேர்ந்த தீபிகா சுரேஷ் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு எனது பெயரில் 3 லாரிகளை வாங்கினார். அதற்கு வரும் மானியத்தை எனக்கு தருவதாக ஆரம்பத்தில் தெரிவித்தார். எனினும், அத்தொகையை அவர் வழங்கவில்லை.
இச்சூழலில் லாரியை பயன்படுத்திய வகையில் ரூ.17 லட்சம் வருமான வரி செலுத்தும்படி எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது பணம் தரவில்லை மேலும், உரிய பதில் அளிக்கவில்லை.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகிறோம். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே இதுபோல் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top