நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவில் வங்கி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நபார்டு வங்கியின் 2025-26ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, நபார்டு வங்கி மூலம் ரூ. 23,848.98 கோடி அளவுக்கு கடன் வழங்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளது.
இதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு 2025-26ம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ. 10,751.96 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ. 2753.24 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ. 72.13 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ. 1042.64 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ. 14,619.98 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 8,098 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ. 211.63 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ. 65.08 கோடி, சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ. 796.04 கோடி என மொத்தம் ரூ. 23,848.98 கோடி அளவுக்கு கடன் வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளது என மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்க உதவும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.