நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (65). இவர் நெடுங்சாலைத்துறையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 6ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன், சொந்த ஊரான எருமப்பட்டி அருகே சிங்கிலியங்கோம்பையில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்ரமணி வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்தது,
இதுகுறித்து அவர் பாலசுப்ரமணிக்கு தகவல் கொடுத்தார். பாலசுப்ரமணி வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, வீட்டு பீரோவில் இருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரம் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பணம் மற்றும் மோதிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.