ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.
- அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
- தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களைப் பாதிக்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
என்பவை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைபின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற மாவட்ட ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். இளங்கோவன் வரவேற்றார்.
தாலுகா ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், ராமச்சந்திரன், சரவணன், மதியழகன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் முருக செல்வராசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள். பாலகிருஷ்ணன், கலைச்செல்வன், கண்ணன், செல்வகுமார், ஜான் பாஷா உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் ஜீவா ஜாய் நன்றி கூறினார்.